பாடசாலை வரலாறு
ஆங்கில காலனித்துவத்தின் கீழ் 1936ம் ஆண்டு இரத்தினபுரி மாநகரத்தின் ஊடாக சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதையின் தொடக்கத்தில் ஒரு சிறிய மலையுச்சியின் மீது இரத்தினபுரி தமிழ் அரச பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. முதல் அதிபராக திரு மு.தேவசகாயம் என்பவர் பணியாற்றியுள்ளார். அத்தோடு உதவி ஆசிரியராக செல்வி S.எக்னஸ் பெனாண்டோ என்பவரும் பணி புரிந்துள்ளார். ஆரம்ப காலத்தில் இங்கு 1-5 வரை வகுப்புக்கள் காணப்பட்டதுடன் தமிழ், முஸ்லிம், மலாய் ஆகிய இன மாணவர்கள் ஒற்றுமையுடன் கல்வி கற்றுள்ளனர். எண், எழுத்து மட்டுமின்றி இணைப்பாடவிதான செயற்பாடுகளான நடனம், சங்கீதம், விளையாட்டு என்பனவும் கற்பிக்கப்பட்டுள்ளன. படிப்படியாக மாணவர் தொகை அதிகரிக்க கட்டிடம், மலசலகூடம், ஆசிரியர் விடுதி என்பவை ஆங்கில அரசாங்கத்தால் அமைத்து தரப்பட்டுள்ளன. வெளிப்பிரதேச அதிபர், ஆசிரியர்கள் கூடுதலாக கடமையாற்றியதால் பாடசாலையில் விடுதி அமைக்கும் தேவை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு வளர்ச்சிப் பாதையில் வந்த எமது பாடசாலை 1950 இல் 1-7 வரை வகுப்புக்கள் கொண்ட கனிஷ்ட பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது. அத்துடன் 1952ம் ஆண்டு ஆகும்போது 1-8 வரை வகுப்புகள் (j .s .c) காணப்பட்டுள்ளது. 1961ம் ஆகும்போது 391 மாணவர்களை கொண்ட எமது கலையகத்தாயின் அரவணைப்பில் கல்வி கற்ற முஸ்லீம் சகோதர சகோதரிகளுக்கு 1963-09-01 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஏக்கர் கொண்ட இரத்தினபுரி தமிழ் கலவன் பாடசாலை பூமியில் ஒரு பகுதியில் வேறு பாடசாலை வழங்கப்பட்டது. 1960 களில் எமது பாடசாலையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் கற்பிக்கப்பட்டுள்ளன. அத்தோடு நாட்டிற்கு நற்பிரசைகளை தோற்றுவிக்க இலங்கை நாட்டில் பல்வேறு பிரதேசங்களிலிருந்து வந்த அதிபர்கள், ஆசிரியர்கள் பணி புரிந்துள்ளனர். மாணவர் தொகை அதிகரித்தமையால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ஆகவே 1966 இல் இரு நேரப் பாடசாலை (காலை/மாலை) நடாத்தப்பட்டுள்ளது. 1975 ற்கு பிற்பட்ட காலத்தில் க.பொ.த (சா /த) (S.S.C), க.பொ.த (உ /த)(H .S .C), கணிதம் , விஞ்ஞானம் ஆகிய வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு கல்வியில் சிறந்து விளங்கியது. 1985 ஆம் ஆண்டு அல்மக்கியா முஸ்லீம் பாடசாலை நமது பாடசாலைக் காணியிலிருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 1988 ஆம் ஆண்டில் பாடசாலைக்கு மிகவும் தேவையாக காணப்பட்ட விஞ்ஞான ஆய்வுக்கூடம் ஒன்று அப்போதைய அதிபர் த்திரு ஏ. ராஜலிங்கம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அரசாங்கத்தால் அமைத்துத் தரப்பட்டது.
இவ்வாறு நீண்ட வரலாற்றை கொண்ட இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயம் 20ம் , 21ம் நூற்றாண்டுகளில் இலங்கை தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் பிரசைகளை உருவாக்கி இருப்பதை மறுக்க முடியாத உண்மையாகும். அத்தோடு நம் கலையகத்தாயின் நிழலில் கல்வி பயின்ற மாணவர்கள் இலங்கையில் மட்டுமின்றி கடல் கடந்த தேசங்களிலும் பாடசாலைக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் வாழ்கிறார்கள் என்பதை பெருமையுடன் கூறலாம்.
மேலும் இரத்தினபுரியில் இரத்தினதீபமாக ஜொலிக்கும் எம் கலையாகத்தாய் இப்பரில் மேலும் மேலும் நற்பிரசைகளை பிரசவித்து நீடுழி வாழியவே!